கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த இக்கட்டான நிலையில் பொதுமக்களுக்கு தேவையான உணவை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான அரிசி தடையில்லாமல் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மத்திய தொகுப்பில் இருந்து திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு தேவையான அரிசி ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 48 பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 7200 டன் ரேஷன் அரிசி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் இருந்த அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி உணவு பாதுகாப்பு கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனர். இந்த அரிசி பின்னர் தேவையான பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.