தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தற்போது ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. பல வழித்தடங்களில் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில்வே நிர்வாகம் அந்தந்த ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் வழிப்பாதையில் ரயில்களின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த ரயில் பாதையில் கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கொக்கிரகுளம் - குறிச்சி ரயில்வே கேட், பாளையங்கோட்டை - குலவணிகர்புரம் ரயில்வே கேட், பாளையங்கோட்டை - பெருமாள்புரம் ரயில்வே கேட் ஆகிய இடங்களில் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதன் அடுத்த கட்டமாக இன்று பாளையங்கோட்டை - சிவந்திபட்டி ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று 08/06/2021 காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை சிவந்திபட்டி ரயில்வே கேட் மூடப்படுகிறது. எனவே பொதுமக்கள் இன்று ஒருநாள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.