திருநெல்வேலி அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. முதலாம் கட்டமாக நடைபெற்ற அகழாய்வில் பழங்கால பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், கிண்ணங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் என பலவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த இரண்டாம் கட்ட அகழாய்வு பணியில் சிவகளை பகுதியில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து 40 முதுமக்கள் தாழிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனால் சிவகளை பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.