தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், தமிழக அரசு மாநிலத்தில் நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதற்காக நோய்த்தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் வகை 3-ல் வரும் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் இன்று முதல் வகை 2-ல் வரும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட்ட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் திருநெல்வேலியில் பேருந்து சேவைகள் தொடங்கப்படுகிறது. பயணிகள் முகக்கவசம் அணிந்தும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றியும் பேருந்தில் பயணிக்கலாம். பேருந்தில் 50 சதவீதம் பயணிகளை இருக்கையில் அமர்ந்து பயணிக்க மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.