திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருக்கோவில் தாமிரபரணி படித்துறையில் நேற்று தை அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். நேற்று அதிகாலையில் இருந்தே தாமிரபரணியில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த மக்கள், பாபநாசம் உலகம்மை உடனுறை பாபநாசநாதர் திருக்கோவிலில் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கினர். அதுபோல மாவட்டத்தில் உள்ள முக்கிய தீர்த்தக்கட்டங்களான அம்பாசமுத்திரம் படித்துறை, திருப்புடைமருதூர் படித்துறை, முக்கூடல் படித்துறை, கோடகநல்லூர் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை, வண்ணாரப்பேட்டை படித்துறை, செப்பறை படித்துறை, முறப்பநாடு படித்துறை, ஸ்ரீவைகுண்டம் படித்துறை உள்பட தாமிரபரணிக்கரையில் உள்ள பிற முக்கிய படித்துறைகளிலும் பக்தர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அருகில் இருந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.