தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழ்வது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பல ரயில்கள் தோலை தூரங்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் பல ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியாகச் சென்று வருகின்றன. இந்த ரயில் நிலையத்தில் சரக்குகளை கையாளும் விதமாக மேற்கு பகுதியில் சரக்கு இறங்கு தளமும் செயல்பட்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை, உரங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இந்தச் சரக்கு இறங்கு தளத்தில் இறக்கப்பட்டு, கனரக வாகனங்கள் மூலம் தேவையான இடங்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்படும். தற்போது ரயில் நிலையத்தில் அதிக ரயில்கள் வந்து செல்வதால், நாளுக்கு நாள் பெருகி வரும் பயணிகள் கூட்டத்தாலும் திருநெல்வேலி ரயில் நிலையம் நெருக்கடி மிகுந்து காணப்பட்டது. இதன் காரணமாக திருநெல்வேலி மாநகரின் புறநகர் பகுதியில் உள்ள கங்கைகொண்டான் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டதுடன் அங்குப் புதிய சரக்கு இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் சரக்கு இறங்கு தளத்தில் நேற்று முதல் முறையாக வட மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட மெட்ரிக் டன் கோதுமை மூட்டைகள் இறக்கப்பட்டு, கனரக வாகனங்கள் மூலம் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் நேற்று முதல் கங்கைகொண்டான் சரக்கு இறங்கு தளம் செயல்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.