திருநெல்வேலி மாநகரில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், அக்னி நட்சத்திரத்தின் தொடக்க நாளான நேற்று மாநகரில் வெயில் சதமடித்தது. பகலில் அவ்வப்போது மேகங்கள் சூழ்ந்து வந்தாலும், மழை எதுவும் பொழியவில்லை. நேற்று தொடங்கிய அக்னி நட்சத்திர காலம் தொடர்ந்து வரப்போகும் 24 நாட்கள் வரை நீடிக்க உள்ள நிலையில், இந்த வெப்பநிலை மேலும் 107'C வரை நீடிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் மாநகரில் உள்ள கடைகளில் பதநீர், நுங்கு, இளநீர், சர்பத், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வெயிலின் தாக்கத்தால் மாநகரில் உள்ள சாலைகளில் அவ்வப்போது கானல் நீர் தென்பட்டன. ஏற்கனவே கொரோனா நோய் பரவல் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், நேற்று அக்னி வெயிலும் தொடங்கியதால் பகலில் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.