கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில், கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரு தவணைகளாக செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா உருமாறி ஒமைக்ரான் தொற்று பரவல் தற்போது அதிகரித்துள்ளதை
அடுத்து இருதவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகள், 4 மாநகராட்சி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் பலரும் ஆர்வத்துடன் வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.