திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஜமாபந்தி நடைபெறுவது வழக்கம். இந்த ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள வரவு செலவு கணக்குகள், பதிவேடுகள் ஆய்வு செய்து தணிக்கை செய்யப்படும். மேலும் பட்டா மாற்றம் செய்தல், தனிப்பட்டா வழங்குதல் உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஜமாபந்தி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானுர் தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
மானூர் தாலுகா ஜமாபந்தி அதிகாரியாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஜமாபந்தியை தொடங்கி வைத்து, வருவாய் தீர்வாயம் கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பலர் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கேட்டு நேரிலும், கொரோனா அச்சறுத்தல் காரணமாக நேரில் வரமுடியாதவர்கள் இணையதளத்தின் மூலமும் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இந்த மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.
இந்த ஜமாபந்தியில் 5 பேருக்கு வீட்டுமனை பட்டா, 2 பேருக்கு பட்டா மாறுதல், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டன. இதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் வழங்கினார்.