தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் மாநிலம் முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியாக சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பியதால், சிறப்பு சிகிச்சை மையம் காலியாக காணப்பட்டது.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டத்தில் நோய்த்தொற்றும் குறைந்து விட்டதால், வழக்கமான சித்த மருத்துவ சிகிச்சைகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, படுக்கைகள் சுத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கியது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்ல துவங்கியுள்ளனர். மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் கபாசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.