கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 19/02/2022 அன்று நாகர்கோவில் மாநகராட்சிக்கும், கொல்லங்கோடு, குழித்துறை, பத்மநாபபுரம், குளச்சல் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 51 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 41 ஆயிரத்து 624 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் மொத்தம் 1,236 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரி, ஆற்றூர் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, லெட்சுமிபுரம் கல்லூரி ஆகிய 8 இடங்கள் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள இடங்களில் கட்டங்கள் வரையப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உரிய எண்களும் எழுதி வைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.