தென்காசி மாவட்டம்., பாவூர்ச்சத்திரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவில். இங்கு மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், 11 ஆம் திருநாளான நேற்று தீர்த்தவாரி விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் கோவிலில் இருந்து முருகர் சப்பரத்தில் எழுந்தருளி, கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலை சென்றடைந்தார். அங்கு மகாகணபதி கோவில் அருகில் வைத்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய தீர்த்தவாரி மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் முருகன் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு வென்னிமலை கோவில் வந்தடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோஹரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.