நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகர்
மற்றும் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இத்திருக்கோவில் அன்றைய ஆங்கிலேயருடைய ஆட்சியின் போது கோட்டையாக அமையப்பெற்று காவல் நிலையமாக இருந்து வந்தது.
விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னதிகள் கோட்டையின் கீழே அமைந்துள்ளது அவை சிதிலமடைந்து இருந்தாலும் பக்தர்களின் ஸ்தலமாக இருந்து வருகிறது.
நேற்று அந்த புகழ் பெற்ற சன்னதியில் பத்தாம் ஆண்டு வருஷாபிபிஷேக விழா நடைபெற்றது . மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பான விழாவில் முதல் நாள் சண்முகார்ச்சனை, இரண்டாவது நாள் அருணகிரிநாதர் குருபூஜையென நடைபெற பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டு களித்தனர்.
நேற்று உத்திராட நட்சத்திரத்தில் விழாவின் முக்கிய நிகழ்வான வருஷாபிஷேக அபிஷேக விழா நடைபெற, அந்த விழாவில் காலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், பூரணாகுதி தீபாரதனை அனைத்தும் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து மிகவும் ஐதீக முறையான கடம் புறப்பாடு நடந்ததும் பிரசன்ன விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி விமான கோபுரங்கள் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை மற்றும் இரவில் பிரசன்ன விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திரு வீதிவுலா மேள வாத்தியத்தோடு வான வேடிக்கையோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Image source: dailythanthi.com