திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற கோவில்களுள் ஒன்றான வள்ளியூர் முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலையில் விநாயகர் பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடு ஆகியவற்றுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் கருவறை விமானத்துக்கும், முருகன், வள்ளி, தெய்வானை, சிவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் விமானம் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் முருகப்பெருமானுக்கும், வள்ளி அம்மைக்கும் திருக்கல்யாண விழா நடைபெற்று, சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.