திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது மணிமுத்தாறு அருவி. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அருவிக்கரைகள், தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. இதையடுத்து அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகவும், மணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மணிமுத்தாறு அருவிக்கு சென்று குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.