தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாத்தூர் தொட்டிப்பாலத்தை சுற்றி பார்க்க எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இயற்கை அழகு சூழ்ந்த பகுதியில் அமையப்பெற்றுள்ள இந்த பாலத்தின் மீது நின்றபடி பரளியாற்றின் அழகையும், இரண்டு கரைகளிலும் நெடிதுயர்ந்து வளர்ந்து காணப்பட்ட மரங்களின் அழகையும் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், அருகிலுள்ள திற்பரப்பு அருவிக்கும் சென்று குளித்து, படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.