உலக செவிலியர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே மாதம் 12ஆம் தேதி உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான உலக செவிலியர் தினம் நேற்று மருத்துவமனை வளாகத்துக்குள் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செவிலியர்கள் அனைவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் முன்பு நின்று, நாங்கள் தன்னலம் கருதாமல், மக்கள் சேவைக்காக பணியாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்களப்பணியாளர்களாகத் தற்போதைய சூழ்நிலையில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை புரிந்து வரும் செவிலியர்களுக்கு நேற்று பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தார்கள்.