தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 8 வாக்காளர்கள் உள்ள திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 496 வாக்குகள் பதிவாகின. இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், தி.மு.க. சார்பில் லட்சுமணன், அ.ம.மு.க. சார்பில் மகேஷ் கண்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியது. தமிழகத்தில் தி.மு.க பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. திருநெல்வேலி தொகுதியில் பதிவான வாக்குகள், அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது நேற்று முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட திரு.நயினார் நாகேந்திரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வந்தார். நேற்று அறிவிக்கப்பட்ட இறுதி முடிவின் படி 92 ஆயிரத்து 282 வாக்குகள் பெற்று அவர் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முந்தைய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. வேட்பாளருமான லட்சுமணனுக்கு 69 ஆயிரத்து 175 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியை முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முந்தைய ஆண்டுகளில் போட்டியிட்டு திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.