திருநெல்வேலியில் புதிய காவல்துறை துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்!
திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளராக இருந்த திரு.ராஜராஜன் அவர்கள், தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு புதிய துணை ஆணையாளராக சென்னை தமிழக சிறப்பு காவலர் பயிற்சி பள்ளியின் படைத்தலைவராக பணியாற்றி வந்த திரு.சுரேஷ்குமார் அவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து திரு.சுரேஷ்குமார் அவர்கள் நேற்று திருநெல்வேலியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு.சுரேஷ்குமார் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திருநெல்வேலி மாநகரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், ரவுடியிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும், ஜாமீனில் வெளியே வந்துள்ள பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைெவளியை கடைபிடிப்பதுடன் தங்களது கைகளை அடிக்கடி சுத்தம் செய்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.