கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசுப் பேருந்துகள் இயக்கம் மற்றும் தனியார் வாடகை வாகனங்களின் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கியமான அரசு அலுவலகங்கள் குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்காக அருகில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.
இதன்படி தென்காசி - திருநெல்வேலி, சங்கரன்கோவில் - திருநெல்வேலி, கோவில்பட்டி - திருநெல்வேலி, தூத்துக்குடி - திருநெல்வேலி, பாபநாசம், அம்பாசமுத்திரம் - திருநெல்வேலி, நாகர்கோவில் - திருநெல்வேலி, ராதாபுரம் - திருநெல்வேலி, காவல்கிணறு - திருநெல்வேலி, திசையன்விளை - திருநெல்வேலி, திருச்செந்தூர் - திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் காலையும், மாலையும் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வந்து செல்லும் வகையில் இரண்டு முறை மேற்கண்ட வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்தப் பேருந்துகளில் அரசு அலுவலங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து பயணம் செய்து கொள்ளலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.