தமிழக அரசு சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்களின் ஆலோசனைப்படி நேற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. மாநகரில் நேற்று அரசு அலுவலர் குடியிருப்பில் உள்ள சொசைட்டி திருமண மண்டபம், பாளையங்கோட்டை அருண்ஸ் மஹால் திருமண மண்டபம், வ.உ.சி மைதானம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பதினெட்டு வயது நிரம்பிய இளம் வயதினர் முதல் அனைவரும் வந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணத்தில் நேற்று 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. வடக்கு விஜயநாராயணம் சிவன் கோவிலில் வைத்து நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷ்ணு அவர்கள் துவக்கி வைத்து, தற்போது நகர பகுதிகளில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் கிராம பகுதிகளில் தொற்று அதிக அளவு காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி போட்டால் தான் கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்ற முடியும் என்று உரையாற்றினார்.