திருநெல்வேலியில் பரவி வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசின் உத்தரவின் பெயரில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே 10ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை ஒட்டி நெல்லை மாநகர காவல்துறையினர் மாநகரம் முழுவதும் சோதனை சாவடிகள் ஏற்படுத்தி மக்களை கண்காணித்து வருகிறார்கள். தேவையில்லாமல் வெளியே சுற்றும் மக்களை தடுத்து நிறுத்தி, கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு அறிவுரைகள் கூறி வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை செய்து வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் சார்பாக பேட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் பங்கு கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரோனா நோய் தொற்றின் அறிகுறி, தொற்று ஏற்பட்டால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒலிபெருக்கி மூலம் எடுத்துக் கூறி, தொற்று ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது, அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவித்தபடி கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினார்கள். இந்தப் பேரணி பேட்டையின் முக்கிய சாலைகள் வழியாக சென்று காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.