திருநெல்வேலியில் நேற்று கேரட் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. நேற்று காலை நிலவரப்படி ஒரு கிலோ கேரட் 10 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது நிலவி வரும் இக்கட்டான கால சூழ்நிலை காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பகுதி நேர ஊரடங்கு காரணமாகவும், நோய்த் தொற்று காரணமாகவும் கல்யாணம், கோவில் விழாக்கள், அன்னதானம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனால் காய்கறிகளின் விற்பனை சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி சந்தைக்கு, கேரட் வரத்து அதிகரித்தது. தற்போது கேரட் அதிக அளவில் அறுவடை செய்யப்பட்டதால் வரத்தும் அதிகரித்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி ஒரு கிலோ கேரட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கேரட்டை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றார்கள். நேற்று காலை நிலவரப்படி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட், நேற்று மாலை நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் கிலோ 30 ரூபாய் வரை ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.