தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு படிப்படியாக தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் 28/06/2021 ஆம் தேதி முதல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட்ட மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் குறித்த விவரம்:
மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பொது பேருந்து போக்குவரத்து, குளிர் சாதன வசதி இல்லாமல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பயணிகள் மட்டும் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
பாத்திரக் கடைகள், போட்டோ / வீடியோ ஸ்டூடியோ, பேன்ஸி கடைகள், சலவை கடைகள் , அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், செல்போன் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
கணினி வன்பொருட்கள். மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
மேற்கண்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28/06/2021 ஆம் தேதி முதல் 05/07/2021ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.