"திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி" என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மை திருக்கோவிலில் வருடம் முழுவதும் பல திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அவற்றுள் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று இந்த கோவிலில் நடைபெறும் அப்பர் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆண்டுக்கான மாசி மகம், அப்பர் தெப்பத்திருவிழா 16/02/2022 நேற்று விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுவாமி நெல்லையப்பர் - தங்க கைலாச பர்வத வாகனத்திலும், காந்திமதி அம்மை - தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்கைலாய காட்சி வழங்கிட, கல்லுரலில் கட்டப்பட்ட நிலையில் அப்பர் பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.