கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் ஒன்றான திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா இரண்டாம் வருடமாக ரத்து செய்யப்படுவதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த திருவிழா நாட்களில் கொடியேற்றம் மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இல்லாமல் சுவாமி சன்னதியில் அமைந்திருக்கும் உற்சவர் மண்டபத்தில் வைத்து பகலில் சிறப்பு அபிஷேகங்களும், மாலையில் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளை நெல்லையப்பர் கோவில் இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் நேரலையாக பக்தர்கள் கண்டுகளிக்க திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.