தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டு 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை சபாநாயகர் திரு. அப்பாவு தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 1,08,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும், தமிழக அரசின் தீவிர முயற்சியால், சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டதால், தற்போது மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது, அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என்றும் கூறினார். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் அருகே நடைபெறும் தடுப்பூசி போடும் முகாம்களில் பங்குபெற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.