திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு பணிகளையும், ரோந்து பணிகளையும் சுழற்சி முறையில் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் IPS அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல் துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்களாக முகக்கவசம், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக நேற்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைவரும் பயன்பெறும் வகையில், நீராவி பிடிப்பதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு நாளைக்கு இரண்டு முறை நீராவி பிடிக்க அறிவுறுத்தப்படுவதால், பணியில் உள்ள காவலர்கள் நீராவி பிடிக்க வசதியாக குக்கர், இன்டக்சன் ஸ்டவ், மற்றும் நீராவி பொடி ஆகியவை வழங்கப்பட்டது. இதன் மூலம் மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் காவலர்களின் உடல் நலம் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.