தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் இல்லாத இந்த ஒரு வார ஊரடங்கில் மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுமக்கள் சிரமம் இன்றி தங்கள் வீடுகளில் இருந்தபடியே வாங்கிக் கொள்ளும் வகையில் வாகனங்களில் நடமாடும் கடைகளை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட 535 வாகனங்களின் மூலம் காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு 80 வாகனங்களும், மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சி பகுதிகளுக்கு 18 வாகனங்களும், மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளுக்கு 115 வாகனங்களும், ஊரக பகுதிகளுக்கு 322 வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறிகள் கிடைப்பதை கண்காணிக்க 9 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.