கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் மேற்கொள்வதற்கும் இ-பதிவு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலும் நேற்று முதல் இந்த இ-பதிவு நடைமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கங்கைகொண்டான், வசவப்பபுரம், மாறாந்தை, காவல்கிணறு, தேவர்குளம், கிருஷ்ணாபுரம், உவரி ஆகிய இடங்களிலும், திருநெல்வேலி மாநகர பகுதிகளான பழைய பேட்டை, பேட்டை, டக்கரம்மாள்புரம், கே.டி.சி. நகர், வி.எம். சத்திரம், தாழையூத்து ஆகிய இடங்களிலும் காவல்துறையினர் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி மக்களை கண்காணித்து வந்தார்கள். அந்த வழியாக பயணம் மேற்கொண்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இ-பதிவு செய்யப்பட்ட ஆவணம் உள்ளதா என சோதனை செய்தனர். இ-பதிவு செய்யப்பட்ட ஆவணம் வைத்திருந்த வாகனங்களை மட்டுமே மாவட்டத்துக்குள் அனுமதித்தார்கள். இதுபோல மாநகர பகுதியில் இ-பதிவு செய்யாமல் வாகனங்களில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு அபராதம் விதித்தும், அத்தியாவசிய மற்றும் அவசிய தேவைகள் இன்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுரைகள் வழங்கியும் திருப்பி அனுப்பினார்கள்.