கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்தவும் மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகரில் உள்ள சுவர்களில் மாவட்ட ஓவியர்கள் நலச்சங்கம் மற்றும் அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ண ஓவியங்கள் வரையும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று திருநெல்வேலி சந்திப்பு, மதுரை சாலையில் உள்ள சுவர்களில் வரையப்பட்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை, திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு.சீனிவாசன் திறந்து வைத்தார். இந்த வண்ண ஓவியங்கள் அனைத்தும் மிக அழகாக வரையப்பட்டு சுவர்கள் அனைத்தும் பளிச்சென்று காணப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.