தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வருவதை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பேருந்து சேவைகளும் அனுமதிக்கப்பட்டன. திங்கள்கிழமையான இன்று முதல் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்த தயாராக, இந்த இரண்டு நாள் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று திருநெல்வேலி மாநகரம் முழுவதும் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டு கூட்டமாக வந்ததால் மாநகரமே ஸ்தம்பித்தது.
திருநெல்வேலி டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய இடங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டமாக வந்து காய்கறிகள், பழங்கள், பலசரக்குகள், தின்பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதுதவிர வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மாநகரில் திருநெல்வேலி டவுன் ரத வீதிகள், பாளையங்கோட்டை திருச்செந்தூர் சாலை, மேலப்பாளையம் பஜார், பேட்டை பஜார், தச்சநல்லூர் பஜார், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மக்கள் அனைவரும் திரண்டு வந்து பொருட்களை வாங்கியதால், மதியத்திற்குள்ளாக பல இடங்களில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது