திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக இன்று முதல் கூடுதல் மையம் திறக்கப்படுகிறது. தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகளவு கூட்டம் கூடுவதால், பொதுமக்கள் அதிக நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் கூடுதலாக ஒரு தடுப்பூசி மையம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள "சென்டர் லெக்சர் தியேட்டர்" கட்டிடத்தில் துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த பணிகளை மருத்துவக்கல்லூரி டீன் மருத்துவர். ரவிச்சந்திரன், துணை முதல்வர் மருத்துவர் சாந்தாராம், மருத்துவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த புதிய மையத்தில் இன்று முதல் 18 வயது - 44 வயது வரை உள்ள நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.