தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமாக விளங்கும் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மை திருக்கோவிலின் பிரசித்திபெற்ற ஆனிப் பெருந்திருவிழா கொரோனா நோய் பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக நடைபெறவில்லை. திருவிழா நடைபெற வேண்டிய நாட்களில் திருக்கோயிலுக்குள் உள்ள உற்சவர் மண்டபத்தில் வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பகலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளும், மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஆனி கேட்டை தினமான நேற்று நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் நடைபெற வேண்டிய நாளில் உற்சவர் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மைக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா நோய் பரவல் தடுப்பு நடைமுறைகளுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக இரண்டாவது ஆண்டாக தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டதால், திருக்கோவில் முன்னரும், சுவாமி நெல்லையப்பர் தேர் முன்னரும் பக்தர்கள் ஒன்றாக திரண்டு திருமுறை மற்றும் திருப்பல்லாண்டு பதிகங்கள் பாடி வழிபட்டனர்.