கும்பகோணம் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தர பெருமாள் கோவில் ஊருக்கு அருகே திருநல்லூரில் அழகான அஷ்டபுஜ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரகாரத்தில் தான் இந்த காளி வீற்றிருக்கின்றாள். நல்லூர் அஷ்டபுஜமாகாளி என்று அழைக்கப்படும் இந்த காளியம்மன் மிகவும் புன்னகை பூத்த முகமாக அனைவருக்கும் அருள் பாவிக்கின்றாள்.
பிரளயத்திலும் அழியாத நாயகியாய் வீற்றிருப்பவள் அஷ்டபுஜ காளியம்மன் என்கின்றது தலபுராணம் .
காளியம்மன் என்றாலே கோர முகமும் ஆவேச தாண்டவமும் நினைவுக்கு வரும் . ஆனால் இந்த காளியம்மன் புன்னகை பூத்த முகத்தவளாய், மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவளாய் , ஆக்ரோஷமே இல்லாது அமைதியாய் வீற்றிருக்கிறாள்.
மழலைச் செல்வம் இல்லையேல் வாழ்க்கையில் இனிது ஏது! என்று மழலைச் செல்வம் வேண்டி நிற்போர் மனம் குளிரும்படி அருள் பாலிக்கின்றாள் திருநல்லூர் அஷ்ட புஜகாளியம்மன்.
இந்த திருத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் மழலைச் செல்வம் உண்டாகும் என்பதால் ஏராளமான பெண்கள் வந்து இந்த அம்மனை வேண்டி செல்கின்றார்கள்.
அவர்களின் வேண்டுதலின்படி அவள் அருளால் நிறைசூழ கர்ப்பிணியாக இந்தத் திருத்தலத்திற்கு வந்து மாகாளி அம்மன் எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள். அவளின் இரு கைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கும் விழா இங்கு நடந்தேறுகிறது.
குழந்தை வரம் என்பது ஒரு பெற்றோரின் வாழ்வின் இனிது காணல். தெய்வத்தின் அருளால் அந்த பாக்கியம் பெற்ற நாம் நல்ல முறையில் வளர்ப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
நல்ல சிந்தையோடு ,தெய்வ மணத்தோடு கல்வி அறிவோடு, கலைநயத்தோடு , ஈகை குணத்தோடு, உழைக்கும் திறத்தோடு வளர்த்து தன் மகன்(ள்) தரணியில் புகழ் பெறவேண்டும் என்பதில் உறுதி கொள்க .யோசித்து செயலாற்றுக.வெற்றி காண்க. வெற்றியில் நிறைவு பெற்று வாழ்வின் பிறவிப்பயன் பெற்று தெய்வத்தின் அருள் பெற்று மகிழ்ச்சி காணுங்கள்.