தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலத்தில் இந்த வருடம் ஜூன் மாத துவக்கத்திலேயே சீசன் சரியாக துவங்கியுள்ளதால் சாரல் மழை கொட்டுகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம், செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பரவலாக விழுகிறது.
குற்றாலத்தில் நேற்று சாரலுடன் கூடிய இதமான சூழல் நிலவியது. இதமான தென்றல் காற்று வீசியது. பேரருவியில் பாதுகாப்பு வளைவு மீது தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் நன்றாக தண்ணீர் விழுகிறது. தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக பொது மக்கள் அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலம் அருவி பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.