குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்வாண்டுக்கான தெப்பத் திருவிழா நேற்று சித்திரசபை முன்புள்ள தெப்பக்குளத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.00 மணிக்கு சித்திரசபையில் சுவாமி குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் குற்றாலநாத சுவாமி, குழல்வாய் மொழியம்மை, இலஞ்சி குமரன், விநாயகர் ஆகிய மூர்த்திகள் எழுந்தருள மாலை 6.00 மணிக்கு தெப்ப திருவிழா தொடங்கியது. தெப்பத்தில் எழுந்தருளிய மூர்த்திகள் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.