தூத்துக்குடி மாவட்டம்., திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி நேற்று அதிகாலை 1.00மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 4.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் உலா வருதலும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை 5.20 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் மாசி திருவிழாவுக்கான கொடியேற்றம் செய்யப்பட்டு, கொடி மரத்துக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தர்ப்பை புற்களாலும், பூமாலைகளாலும், பட்டு வஸ்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு சோடச தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.