தென்மேற்கு பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சிதுறை, காவல்துறை, தீயணைப்புதுறை, நெடுஞ்சாலைதுறை, மின்வாரியம், பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை மற்றும் சுகாதாரப்பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்ந்த அலுவலர்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், மழை நீர் செல்லும் வழித்தடங்களை கண்டறிந்து அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி மழை வெள்ளம் தங்கு தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள் தெரிவித்தார்.