தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை ஆகியவற்றிலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
நேற்றைய நிலவரப்படி பாபநாசம், குண்டாறு அணைப்பகுதியில் 42 மில்லி மீட்டர் மழையும், அடவிநயினார் அணைப்பகுதியில் 23 மில்லி மீட்டரும், சேர்வலாறு, கொடுமுடியாறு அணைப்பகுதியில் 20 மில்லி மீட்டர் மழையும், செங்கோட்டையில் 19 மில்லி மீட்டர் மழையும், கருப்பா நதி அணைப்பகுதியில் 16 மில்லி மீட்டர் மழையும், தென்காசியில் 13 மில்லி மீட்டர் மழையும், கடனாநதி அணைப்பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும், சங்கரன்கோவில், ஆய்க்குடி பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.