தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் அமலான இந்த ஊரடங்கின் காரணமாக திருநெல்வேலி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாநகர் முழுவதும் ஆங்காங்கே காவலர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி கவனித்து வந்ததன் காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் குறைந்தது.
மாநகரில் எப்போதும் அதிக நெருக்கடி மிகுந்து காணப்படும் திருநெல்வேலி ரத வீதிகள், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருவள்ளுவர் இரட்டை மேம்பாலம், வண்ணாரப்பேட்டை சந்திப்பு, திருவனந்தபுரம் சாலை, மேலப்பாளையம் ரவுண்டானா ஆகிய அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி மாநகர மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தகுந்த காரணம் இல்லாமல் சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.