திருநெல்வேலி மாநகரில் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், சந்திப்பு பாளையஞ்சாலைக்குமார சுவாமி திருக்கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், வண்ணாரப்பேட்டை குட்டத்துறை முருகன் கோவில், திருநெல்வேலி டவுண் வேணுவனக்குமாரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் நேற்று பக்தர்கள் அனுமதியின்றி தைப்பூச விழா பூஜைகள் நடைபெற்றது.
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி நேற்று பகலில் சிறப்பு யாகங்களுடன் கூடிய அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதுபோல பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவிலிலும் நேற்று சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கோவில் வாசலில் நின்றபடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.