இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 110-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம்., செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வாஞ்சிநாதன், அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை, மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 1806-ம் ஆண்டில் நடைபெற்ற வேலூர் புரட்சிக்குப் பின், 1910-ம் ஆண்டு வரையில் ஆங்கிலேயருக்கு எதிராக யாரும் ஆயுதம் ஏந்தாத நிலையில், ஏறத்தாழ 105 ஆண்டுகள் கழித்து 1911-ல் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் வாஞ்சிநாதன் ஆவார். அவரது நினைவாக மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் சூட்டப்பட்டது.
நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் மணி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா அவர்களும், வாஞ்சிநாதனின் வாரிசு வாஞ்சி கோபாலகிருஷ்ணன் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.