இந்து முஸ்லிம் மத நல் இணக்கத்திற்கு உதாரணமாக விளங்கும் தெற்கு விஜய நாராயணன் தர்கா கந்தூரி விழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தெற்கு விஜய நாராயணபுரத்தில் மேத்தபிள்ளையப்பா தர்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த தர்காவில் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த வருடமும் ஆடி மாதம் 16ஆம் தேதி கந்தூரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
தர்கா அமைந்துள்ள தெற்கு விஜய நாராயணத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் கூட கிடையாது என்பது மிக பெரிய ஆச்சரியம் . வெளியூர்களிலிருந்து கந்தூரி விழாவிற்காக வரும் முஸ்லிம்களை, இந்து தேவர் சமுதாயத்தினர் தங்களுடைய வீடுகளில் வரவேற்று தங்க வைப்பார்கள். உபசரித்து அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றனர். அவர்களே கந்தூரி விழாவையும் முன் நின்று நடத்துகின்றனர் .
இந்த வருடம் அதிக அளவில் முஸ்லிம்கள் கந்தூரி விழாவில் கலந்து கொண்டனர். காலையில் கொடி ஊர்வலமானது மேத்தபிள்ளையப்பா பிறந்ததாக சொல்லப்படும் இல்லத்தில் இருந்து புறப்பட்டது. திரளான முஸ்லிம்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தனர் . அதன் பின்பு தர்காவில் கொடியேற்றப்பட்டது . தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது . இந்த விழா முஸ்லிம் இந்து ஒற்றுமையை எடுத்துக்காட்டும் நல்லிணக்க விழாவாக அமைந்திருந்தது.
Image source: dailythanthi.com