- நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்கூட்டத்தில் ஆணையரிடம் மக்கள் மனுஅளிப்பு.
- மாற்றுத்திறனாளிடம் ஆணையர் எழுந்து சென்று மனுவைப் பெற்றுக் கொண்ட நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகர பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் லெனின், உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, ராமசாமி ,நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் திரு.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தச்சநல்லூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மகாராஜன் தவழ்ந்தபடி வந்து மனு கொடுத்தார். உடனே ஆணையாளர் விஷ்ணுசந்திரன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று கோரிக்கை மனுவை பெற்றது பார்ப்போர் நெஞ்சை நெகிழ வைத்தது.
"இரண்டு கால்களும் இல்லாத தமக்கு வாய் பேச முடியாத மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிக்க முடியாது சிரமப்படுவதாகவும், அரசு பெட்டிக்கடை வைத்து தர வேண்டும்" என்று மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஆய்வு செய்த ஆணையாளர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
உதயம் வெங்கடேஸ்வரா குடியிருப்போர், வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழி சாலை உடையார்பட்டி பகுதியில் சாலை பணிகள் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
தச்சநல்லூர் மண்டலம் பாலபாக்யா பகுதி மக்கள் சார்பில் தெரு விளக்கு மற்றும் வீட்டு எண், குடிநீர், சாலை வசதி சீரமைப்பு நடவடிக்கை விரைவில் செய்ய கோரி மனு அளித்திருந்தனர்.
நெல்லை சந்திப்பு எஸ் என் ஈரோடு வியாபார சங்கத்தினர் கொடுத்த மனுவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவில் முடித்து சாலை அமைக்க வேண்டும் என மனு அளித்தனர்.
நெல்லை மாநகர் சந்திப்பு பகுதி வியாபாரிகள் கொடுத்த மனுவில் பஸ் செல்வதற்கான சாலை சீரமைப்பு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
நெல்லை மாநகர சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் டவுன் பகுதியில் நிரந்தரமான இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் கடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நிறைவாக அனைவருடைய மனுக்களும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.