இந்தியா முழுவதும் தற்போது சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் (ஸ்மார்ட் சிட்டி) சுமார் நூறு நகரங்களில் சிறப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயமுத்தூர், வேலூர், ஈரோடு, தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் சீர்மிகு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாநகரை பொறுத்த வரையில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி டவுன் மார்க்கெட் ஆகியவற்றில் புதிய கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணிகள், பொருட்காட்சி திடலில் புதிதாக வர்த்தக மையம் அமைக்கும் பணிகள் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிகளை மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வீட்டுவசதி துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதில் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக பணிகளை மேற்கொண்ட நகரங்களில் டேராடூன் மாநகராட்சிக்கு முதல் இடமும், சாகர் மாநகராட்சிக்கு இரண்டாவது இடமும், திருநெல்வேலி மாநகராட்சிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது!