திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த மே மாதம் 2 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு மையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை 5 தொகுதிகளில் தேர்தலுக்காக 1924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் அரசு பொறியியல் கல்லூரியிலிருந்து, எடுத்து வரப்பட்டு திருநெல்வேலி டவுன் தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் புதிதாகக் கட்டப்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்துக்கு வந்து சேர்க்கப்பட்டது. இந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் தேர்தல் ஆணைய அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.