ஒரு குடும்பத்தில் சிறுவயதில் பெண்கள் அல்லது இளம் வயது பெண்கள் இறந்து விட்டால், அல்லது திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இறந்து விட்டாலும் அந்த பெண்களை குலதெய்வமாக நினைத்து வழிபடுவது நம்முடைய முன்னோர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
இதற்காக அன்றைய காலங்களில் அந்தப் பெண்களுக்காக கோவில் கட்டுவார்கள் . மூலவர் சன்னதியில் சுவாமி சிலைக்கு பதிலாக புடவையை வைத்து வழிபாடு செய்வது என்பதை புடவைக்காரி வழிபாடு என்கிறோம். இந்த வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வம் மனம் குளிர்ந்து அனைத்து நலனும் அருள்வதாக ஐதீகம்.
அந்த புடவையை வைத்து சாமி கும்பிட்டு முடித்த பிறகு ஒரு பேழை பெட்டியிலோ அல்லது ஒரு குடத்திலோ வைத்துப் பாதுகாப்பார்கள்.
ஒவ்வொரு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இறந்தவர்களை குலதெய்வமாக நினைத்து கோவிலில் வழிபாடு நடத்துவார்கள். வருடம் தோறும் ஆடி மாதம் மிகப் பெரிய திருவிழாவாக புடவைக்காரி வழிபாடு நடைபெறும் . விழாவில் பொங்கல் படையல், ஆடுகள் கோழிகள் பலியிடுதல், கன்னிமார்களை அழைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல், காடேறுதல் என இரண்டு மூன்று தினங்களுக்கு புடவைக்காரி திருவிழா சிறப்பாக நடைபெறும் . ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசிப்பார்கள்.
சிறு வயதில் இறந்த நம் குல பெண்களை நினைத்து வழிபடவில்லை என்றால் வீட்டில் நிறைய அபச சகுனங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் . கெட்ட கனவு வாகன விபத்து என நிகழ்வதும் உண்டு. என்ன என்பதை அறிந்து அதன்படி செயல்பட்டால் நிச்சயமாக அதற்கான ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்
கோவிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டிலேயே வருடா வருடம் சிறுவயதில் இறந்த பெண்களுக்கு நினைவு கூறும் வகையில் பட்டுப்பாவாடை சட்டை வைத்து வழிபடுவது , அந்த வயது பெண்களுக்கு துணிமணி எடுத்து கொடுப்பது என குலதெய்வத்தை நினைத்து வேண்டி வழிபடுவார்கள்.
அப்படி செய்யும்போது இறந்த ஆத்மாக்கள் குளிர்ச்சி பெற்று அவர்களுடைய ஆசி கிடைக்கும். குடும்பம் சுபிட்சமாக தழைத்தோங்கும் என்பது காலாகாலமாக கடைப்பிடித்து வரும் வழிபாடு.
தமிழகத்தில் காலம் காலமாக நடத்தப்படும் புடவைக்காரி வழிபாடு என்பது குடும்பம் நலமாக மகிழ்ச்சியாக, அமைதியாக ,சிறப்பாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என்பதால் குலதெய்வத்தை நினைத்து படைத்து வாழ்க்கையில் வளம் காணுங்கள்.
Image source: dinakaran.com