ஓம் எனும் மந்திரத்தின் தலைவனாய் விளங்கும் கணபதி முக்கண் முதல்வனாக முப்பெரும் தலைவனாக விளங்குபவர். எந்த காரியத்தை முதலில் தொடங்கும் போதும் கணபதியை வழிபட்டு தொடங்கினால் அந்த காரியம் ஜெயம் ஆகும். பூர்த்தியாகும் . வெற்றி கிடைக்கும். இலட்சியம் நிறைவேறும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த மானவர் பிள்ளையார். ஏனென்றால் அவருடைய வழிபாட்டில் அதிக பட்சணங்கள் வைத்து நாம் படைக்கின்றோம் . அதில் முக்கியமாக லட்டு, கொழுக்கட்டை, சுண்டல் என்பது அவருக்கு மிகவும் பிடித்தமானவை என்பதால் விநாயகர் சதுர்த்தி அன்று நிச்சயமாக நம்முடைய படைப்பில் அனைத்தும் இடம்பெறும்.
லட்டு ,கொழுக்கட்டை, பழங்கள் என கையில் ஏந்தியவாறு காட்சி தருபவர் விநாயகப் பெருமான் . விநாயகப் பெருமானின் பல்வேறு திருக்கோலங்களை பற்றி பார்க்கும் போது விநாயகமூர்த்தி பட்சணங்கள் கையில் ஏந்தி இருக்கும் சிற்பமே மிகவும் சிறப்பான சிற்பம் கருதப்படுகிறது
'மூஷிக வாகன மோதக ஹஸ்த ஸாமரகர்ண விளம்பர சூத்ர- வாமன ரூப மகேஸ்வர புத்ரா விக்ன விநாயக பாத நமஸ்தே '
எனும் ஸ்லோக பாடலில் மோதகமும் இடம்பெறுகிறது.
கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும் விரும்பும் விநாயகனே வேண்டி... எனும் அடிகளில் சிலப்பதிகார அரும்பத உரையில் மிகவும் அழகாக விநாயகப் பெருமானின் பாடலை இயம்புகின்றது.
விநாயகர் கரும்பு இளநீர் மற்றும் கனிகளை விரும்புவார் என்று அதில் குறிப்பிடப்படுகிறது.
'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாளும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா '
எனும் ஔவையார் எழுதிய தித்திக்கும் பாடலில் பாலும் தேனும் பாகு பருப்பும் என விநாயகப் பெருமானுக்கு வைக்கப்படும் பட்சணங்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைத்தல நிறைக்கனி அப்பமொடு அவல்பொரி கப்பிய கரிமுக னடிப்பேணி- கற்றிடும் மடியவர் புத்தியில் உறைபவ கற்பகமென வினை கடிதேகும் , மத்தமும் மதியமும் வைத்திடு மறன்மகள் மற்பொரு திறள் புய மதயானை .... எனும் பாடலிலும் கைகளில் கனிகளும் அப்பமும் அவல் பொறிகளும் விநாயகர் பெருமான் வைத்திருப்பார் எனும் அழகிய பொருள் தனை விளக்குகிறது.
இதன்படி விநாயகர் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான பட்சணங்கள் வைத்து படைத்து அவருடைய அருளைப் பெற்று வாழ்க்கையில் வளம் காண்போம்.
Image source: dinakaran.com