ஏராளமான விநாயகர் சிலைகள் கடற்கரையில் கரைக்கும் அழகுதனை பார்ப்பதற்கு எவ்வளவு மக்கள் கூட்டம்! வண்ணமயமான பெரிய பெரிய விநாயகர் சிலைகள் தத்ரூபமாக, ( வடிவமைத்தவருக்கு நிச்சயம் நன்றி சொல்லும் வண்ணம் )அமர்ந்த கோலம் நின்ற கோலம், எழுகின்ற கோலம், நம் மனதையும் சேர்த்து எழ வைக்கின்ற கோலம் என பல்வேறு வடிவ கோலங்களில் எம்பெருமானே , ! விநாயகா! கடல் ஆற்றிலே நீ கரைவதற்கு முன்பாக என் கண்களின் பார்வையிலே கரைந்து விட்டாய் அப்பனே! என பக்தி பரவசத்தோடு மக்கள் கூட்டம்.அலைமோதுகிறது.
வருடம் முழுவதும் நாம் பெருமானை தேடி கோவிலுக்கு செல்கின்றோம். ஆனால் விநாயகப்பெருமானே வருடத்திற்கு ஒருமுறை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று நம் இல்லம் தேடி வருகின்றார் .
எப்படிப்பட்டகோலத்திலே வருகின்றார்! ஆடம்பரம் எதுவுமின்றி எளிமையான கோலத்திலே களிமண் என சொல்லக்கூடிய மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் பெருமானாக இல்லத்துக்குள் நுழைகின்றார்.
'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா'
என ஔவையார் செப்பிய இனிது தமிழ் மொழியை இசைத்தபடி பிள்ளையார் சதுர்த்தி இனிதாய் படைத்து நிறைவு கண்டோம்.
விநாயகர் சதுர்த்தி என்றால் நம் நினைவகம் நிறைவது அவருக்கு பிடித்தமான அவல்பொரி, பழம், பட்சணங்கள் அடுத்து களிமண் பிள்ளையார்.
களிமண் பிள்ளையார் வழிபாட்டில் நமக்கு ஒரு அருமையான தத்துவத்தையும் மிக அழகாக கூறுகின்றார்
'மனிதபிறவியில் பிறந்த நாம் என்றாவது ஒரு நாள் முடிவு மண்ணிலே -என்பதை உணர்ந்து அகங்காரம், ஆணவம் அனைத்தையும் விடுத்து நல்லொழுக்கம் பக்தியோடு வாழ்ந்து முடிவில் என்னோடு ஐக்கியமாகுங்கள் 'என்று மிக அழகாக உணர்த்தவே களிமண் கோலத்தில் காட்சி தருகின்றார் விநாயகப் பெருமான் .
மண்ணிலே மறையப்படும் உடல் தனை விடுத்து , நம்முடைய ஜீவ ஆத்மாவை விநாயகர் பெருமானிடம் வைத்து ஆன்மீக பெரும் கடலில் கரையக்கூடிய விநாயகர் பெருமானோடு சேர்ந்து நாமும் ஐக்கியமாகி , வாழ்க்கையில் பெரும் பாக்கியத்தை அடைவோம் என்பதை நினைவு கூறும் நாளே விநாயகர் சதுர்த்தி அன்று ஆற்றில் விநாயக பெருமான் கரைந்துருகும் நாளாகும்.
மனம் இனிக்க , மங்கல நிகழ்ச்சிகள் அனைத்தும் வீட்டினிலே இனிதேற , மாவிலை தோரணங்கள் மலர்களோடு சேர்ந்து இசைந்தாட, நாதஸ்வர இசையோ கானமழை பொழிந்தாட, ஒவ்வொரு இல்லமும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து மனிதப் பிறவியின் வாழ்வுதனில் நிறைவு காணுங்கள் .